தங்கம் விலையை பொறுத்தவரை எப்போது ஏறும் எப்போது குறையும் என்று சமீப காலமாக துல்லியமாக கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஒரு சில நாட்கள் தொடர்ந்து விலை சரிவை எதிர்கொண்ட தங்கம் திடீரென்று ஏற்றம் கண்டது. உலக அளவில் பணவீக்கம், தங்கத்துக்கான டிமாண்ட், இறக்குமதி வரி உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று இங்கு பார்க்கலாம். பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்த பட்டியலில் தங்கம் இடம் பெற்று இருந்தது. ஆனால் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை. மாறாக வெள்ளிக்கான இறக்குமதி வரி மட்டும் தான் குறைக்கப்பட்டு இருந்தது.

இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை என்ற சூழ்நிலையில் கூட பிப்ரவரி மாதம் முழுவதுமே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் அதிகரித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 76 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 32 மாதங்களாக ஒப்பிடும்போது இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததால் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் நகை கடைக்காரர்கள் தங்கம் கொள்முதலில் தாமதம் செய்தனர் என அரசாங்கத்தில் வெளியான தகவல் குறிகின்றது. தங்கம் கொள்முதலில் உலகில் மிகப்பெரிய இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி சரிந்துள்ளதால் இவை விலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தியாவில் வணிகத்தில் இருக்கும் குறைபாடுகள் மற்றும் சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை சரி செய்வதற்கு இது உதவும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 45 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 11 டன் தங்கம் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பை பொருத்தவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2.38 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 697 மில்லியன் டாலராக சரிந்துள்ளது. இந்தியாவில் தங்கம் வாங்குவதில் பல்வேறு காரணங்கள் உள்ளன. திருமணங்களுக்காக மொத்தமாக வாங்கும் பழக்கம் இருக்கிறது. மாதம் மாதம் அல்லது இயன்ற போது தங்கம் சேமிக்கும் பழக்கமும் இருக்கிறது.

எனவே தங்கத்தை பொறுத்தவரை நகையாக வாங்குவது தான் இந்தியாவில் மிக மிக அதிகம். பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி எப்படி குறைக்கப்படம் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நகை வியாபாரிகளும் மில்லியன் டீலர்களும் ஜனவரி மாதம் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட தங்கத்தை கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது. நடப்பு மாதத்தில் தங்கம் இறக்குமதி எந்த அளவுக்கு அதிகரித்திருப்பது என்பது பற்றிய தகவல் அடுத்த மாதம் தெரிய வரும். இந்த நிலையில் திருமணம் காலம் தொடங்கி இருப்பதால் நடப்பு மாதம் மட்டுமல்லாமல் அடுத்த சில மாதங்களுக்கு தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கும்.