தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் (40). இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பதிவான வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மனைவி ரேவதி (45) மற்றும் அவரது மகள் பூமிகா (25) புடவைகளை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகள் பதிவான வாடிக்கையாளர் என்பதால் சுந்தரின் நம்பிக்கைகுரிய வாடிக்கையாளராக ரேவதி, பூமிகா இருந்தனர்.

இந்த நிலையில் சென்ற ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரன் என்பவரை ரேவதி, பூமிகா ஆகியோர் சுந்தரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். வீரன், சுந்தரிடம் நன்கு பழகி வந்துள்ளார். வீரன், சுந்தரிடம் மதுரையை சேர்ந்த  வெற்றிவேல் என்பவர் தங்க பிஸ்கட் அதிகம் வைத்துள்ளதாகவும், அவரிடம் தங்க பிஸ்கட்டை வாங்கி நாகப்பட்டினத்தை சேர்ந்த நகை ஆசாரியான பாலசுப்பிரமணித்திடம் கொடுத்து மிகக் குறைவான விலைக்கு இன்றைய புதிய டிசைன்களில் நகை செய்து கொள்ளலாம் என கூறி பல நகை டிசைன்களையும் காட்டி சுந்தரை நம்ப வைத்துள்ளார்.

இதனால் சுந்தர் 125 பவுன் நகை செய்ய வீரனிடம் கூறியுள்ளார். அதன்படி ரேவதி, வெற்றிவேல், நகையாசாரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் வங்கி கணக்குகளில் சுந்தர் சுமார் ரூபாய் 74,75,000 பலமுறை தவணை முறையில் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் நகையை திருப்பிக் கொடுக்காமல் அனைவரும் ஏமாற்றியுள்ளனர். இதனால் சுந்தர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரேவதி, பூமிகா, வீரன், வெற்றிவேல், பாலசுப்ரமணியம், ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரேவதி, வீரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை ஆய்வாளர் மாயா ராஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.