கோவை மாவட்டம் அன்னூரில் சோதனை முறையில் சமைக்கப்பட்ட காலை சிற்றுண்டியை ருசித்து பாராட்டிய பெற்றோர்கள் காலையிலேயே வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெரும் பயனுள்ள திட்டமாக இது அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டித் திட்டம் கடந்தாண்டு சில பள்ளிகளில் முதல் கட்டமாக தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக வரும் 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா மூன்று பேருக்கு உணவு பரிமாறுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை அன்னுர் பகுதியை சுற்றி தலா 88 காலை சிற்றுண்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோதனை முறையில் சமைக்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவை  பெற்றோர் மற்றும் மேலாண்மை குழுவினர் சாப்பிட்டு, சமையல் பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டினர். பெற்றோர் இருவரும் காலையிலேயே வேலைக்கு சென்று விடுவதால், காலை உணவை சமைக்க முடியாத நிலை பல நாட்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.  தற்பொழுது இந்த திட்டத்தினால் தங்களுக்கு பெரும் சுமை குறைந்து இருப்பதாகவும், காலையிலையே  குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.