உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகின்றது. இந்த ஷாப்பிங் மாலில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஏழைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்ற வழக்கத்தை ஐந்து ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றன.

பொதுவாக வட மாநிலங்களில் குளிர்காலம் மிக தீவிரமாக இருக்கும் என்ற நிலையில் உரிய உறைவிடம், உடைகள் இல்லாமல் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு இந்த மாலின் உரிமையாளர்கள் குளிர் அதிகம் இருக்கும் மூன்று மாதங்களில் ஏழை மக்கள் மாலுக்குள் தேவையான உடைகள் துணிகளை எடுத்துக் கொண்டு செல்லாம் என்ற புதிய முயற்சியை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஆண்டுதோறும் நடத்தி வருகின்றதாக சொல்லப்படுகின்றது.

மேலும் ஏழைகளுக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பொருட்களை வாங்கி இந்த மாலில் வைத்து விட்டு செல்லும் வசதியும் உண்டு. இதனை மால் ஊழியர்கள் பரிசோதித்த பின்னர் வாங்கிக் கொள்கின்றனர். பெரும்பாலும் இங்கு மருத்துவர்கள் நன்கொடை வழங்குவதாகவும் கடந்த ஆண்டு சுமார் 3,000 லிருந்து 4,000 பேர் வரை தேவையான துணிகளை மாலில் இருந்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. மேலும் ஷாப்பிங் மாலின் இந்த புதிய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.