மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன் நீலகிரி பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

நேற்று மாலை அவர்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து உதகை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் அருகில் கல்லாறு முதல் வளைவில் காரை திருப்ப முயன்ற போது பிரேக் பிடிக்காததால் எதிர்பாராத விதமாக மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் திவ்யபிரியா, பரமேஸ்வரி மற்றும் வளர்மதி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் திவ்யபிரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து காயமடைந்த பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.