கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றாறு ரப்பர் கழக மருந்தகத்திற்கு செல்லும் சாலையில் தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்திருக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த தொழிலாளி ஒருவர் கழிப்பறை அருகே சிறுத்தை நின்று கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே மிரண்டு போன சிறுத்தையும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

அப்போது விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் போடப்பட்டிருந்த தார்ப்பாயில் சிக்கி நகர முடியாமல் சிறுத்தை தவித்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது தார்ப்பாயில் சிக்கி இருந்தது 4 மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது.

உடனே வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு ஜீரோ பாயிண்ட் வன சோதனை சாவடிக்கு கொண்டு சென்றனர். அந்த சிறுத்தை குட்டி சோர்வாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறுத்தை குட்டி யாரையும் தாக்கவில்லை. குட்டியை அதன் தாய் பிரிந்து சென்றிருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.