கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் நல்ல முடி, ஆனைமுடி, தாய்முடி எஸ்டேட் பகுதியில் 9 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரம் தாய்முடி எஸ்டேட் மத்திய பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் மாரியம்மன் கோவில் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சத்துணவு அமைப்பாளர் சாந்தகுமாரி என்பவரது வீட்டை உடைத்து தள்ளியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்டியடித்ததால் அமைப்பாளர் குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்புக்கு இருக்கும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.