ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இதனால் தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக  கூறி கடந்த 2014 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ‌.100 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இதற்கு சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டதோடு அவருக்கு மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பத்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு மேல்முறையீடு மனு தொடர்பாக எம் எஸ் தோனி பதில் அளிக்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீடு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, சம்பத்குமாருக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கான இடைக்கால தடையை நீட்டிப்பதாக கோர்ட்  உத்தரவிட்டுள்ளது.