சொத்துக்கள் இருக்கும் வரை பெற்றோரை பார்த்துகொள்ளும்  பிள்ளைகள் அந்த சொத்துக்கள் முழுவதுமாக எழுதி வாங்கியவுடன் அவர்களை கண்டு கொள்ளாமல் தவிக்கவிடும் சம்பவம் புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியே சொன்னால் கௌரவம் போய்விடுமோ? என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது பெற்றோருக்கு உள்ள பாசத்தினாலும்  இதனை சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஒரு காலகட்டத்தில் எல்லை மீறும்போது அவர்களுக்கு பாரமாக இருந்த விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறி அனாதை இல்லம், பிச்சை எடுத்து கடைசி காலத்தை கழிக்கின்றனர். இது குறித்த குற்றச்சாட்டுகள் சமீப காலமாக புதுச்சேரியில் அதிகரித்து வருவதனை தொடர்ந்து கலெக்டர் மணிகண்டன் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இதுபோன்ற சொத்துக்களை எழுதி வாங்கிய பின்பு பெற்றோரை முதியோர் இல்லங்களிலும், தெருகளிலும் தவிக்க விடுவது மிகவும் வேதனைக்குரியதாகும். சொத்துக்களை வாங்கிக் கொண்டு முறையாக பெற்றோர்களை பராமரிக்க தவறினால் பெற்றோர்கள் தாராளமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்ற மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.  அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தரப்படும்.

பெற்றோரை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பிள்ளைகளும் தலையாய கடமையாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காததால் பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இது குறித்த புகார் அதிக அளவில் வருவதனால் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் மீது எழுதப்பட்டுள்ள சொத்து பத்திரம் ரத்து செய்வது மட்டுமல்லாமல் சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாவார் என கூறியுள்ளனர்.