இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் முக்கியமான அமைப்பாக விளங்கும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்தப்படும் PIN எண்கள் வழியாக நிதி மோசடிகள் நடைபெறக்கூடிய அபாயம் மற்றும் அருகில் உள்ளவர்கள் PIN ஐ கண்காணிக்கும் நிலை உருவாகலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய பாதுகாப்பு முறையை அறிவித்துள்ளது.
அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN எண்ணை உள்ளிடும் நடைமுறைக்கு பதிலாக, பயோமெட்ரிக் அங்கீகார வசதி கொண்டு பரிவர்த்தனைகள் செய்ய முடியும். குறிப்பாக, கைரேகை (Fingerprint) மற்றும் முக அங்கீகாரம் (Face Recognition) ஆகியவை மூலம் பரிவர்த்தனை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகார செய்முறைக்கு, ஆதார் தகவல்களில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இன்று (அக்.08) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை மேலும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
