காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும், காஷ்மீரிலும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். இது போல பயணிகளின் உடைமைகள் ஆவணங்கள் சோதனை செய்யப்படுகிறது.

விமான நிலையத்தில் ஏப்ரான் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல விமானத்திலிருந்து இறங்கி வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த சோதனை 18-ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.