அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில் , அவரை திமுக இலக்கிய அணி தலைவராக நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வந்த அன்வர் ராஜா, கட்சியின் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அண்மையில் இணைந்தார்.
இதற்கு முன், அன்வர் ராஜா திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவரை கட்சியில் இருந்து நீக்கும் உத்தரவை பிறப்பித்தார். பின்னர் திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
