தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்குப் பணத்திற்குப் பதிலாகக் கூப்பன்கள் வழங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பதவிக்காலம் வரும் மே 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை வெளிப்படையாக மீறி வருவதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், “குறிப்பிட்ட தொகுதிகளில் வாக்காளர்களுக்குத் தலா ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்களை தி.மு.க.வினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விநியோகிக்கப்பட்ட கூப்பன்களைப் பறிமுதல் செய்து, தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூப்பன் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தேர்தல் ஆணையம் வழங்கியதாகக் கூறப்படும் அந்தச் சான்றிதழ், மின்னணு ஊடகங்களில் (Electronic Media) விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரங்களுக்கோ அல்லது இதர பயன்பாடுகளுக்கோ பொருந்தாது.
இந்த விளக்கத்தின் மூலம், விளம்பர அனுமதிச் சான்றிதழை வைத்துக்கொண்டு விதிகளை மீறிச் செயல்பட அனுமதி இல்லை என்பதைத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. புகாருக்குள்ளான தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் இதற்கிடையில் திமுகவினர் வழங்கும் 8000 கூப்பன் தனக்கு ஏன் வழங்கவில்லை என கேட்ட சிந்துஜா என்ற பெண்ணை திமுகவினர் ஆபாசமாக பேசி தாக்கியதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
