தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய இருவர் மாரடைப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், நாக்கியாம்பட்டி வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) கண்ணதாசன் (59) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி ராமகிருஷ்ணன், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் (NIB) பணியாற்றி வந்த இவர், தேர்தல் பணிக்காக ஒட்டன்சத்திரத்திற்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்தலுக்கு மத்தியில், பணியில் இருந்தபோதே இரு அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் தமிழக காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.