சர்வதேச விண்வெளித் துறையில் பல்வேறு மைல்கற்களை எட்டிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால நாசா பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா – போனி தம்பதியரின் மகளாக 1965-ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார். அமெரிக்காவின் நீதம் பகுதியில் பள்ளிக்கல்வியையும், புளோரிடாவில் பொறியியல் படிப்பையும் முடித்த இவர், அமெரிக்கக் கடற்படையில் விமானியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சிறுவயது முதலே விண்வெளி மீது கொண்டிருந்த ஈர்ப்பு, அவரை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் (NASA) இணைய வைத்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், ஒட்டுமொத்தமாக மூன்று முறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். விண்வெளியில் இதுவரை 608 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். விண்வெளியில் நீண்ட நேரம் நடந்த வீராங்கனை உள்ளிட்ட பல சாதனைகள் இவரது வசம் உள்ளன.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், புட்ச் வில்மோருடன் இணைந்து ‘போயிங் ஸ்டார்லைனர்’ விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் சென்றார். வெறும் 8 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்தப் பயணம், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீட்டிக்கப்பட்டது. சுமார் 286 நாட்கள் (9 மாதங்கள்) விண்வெளியிலேயே தங்கியிருந்த அவர்கள், சவால்களை முறியடித்து இந்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி பூமிக்கு பத்திரமாகத் திரும்பினர்.
தற்போது 59 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ், 27 ஆண்டுகள் நாசாவில் பணியாற்றிய நிலையில், தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பிற்கு முன்னுதாரணமாகத் திகழும் சுனிதா வில்லியம்ஸின் சாதனைகள், உலகெங்கிலும் உள்ள இளைய தலைமுறையினருக்குப் பாடப்புத்தகமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
