உத்திரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே மாத குழந்தை சிகிச்சைக்காக 22 நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்த நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது என்பது பின்னர் தெரியவந்தது.
அந்த மரணத்தை மருத்துவமனை மறைத்து, ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்துவிட்டு, பெற்றோரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் வசூலித்துள்ளனர் என்பது தந்தையின் குற்றச்சாட்டாக உள்ளது.
மரணம் நடந்தது தெரிந்தும் குழந்தையை மற்ற மருத்துவமனைக்குத் ரெஃபர் செய்ய மறுத்த மருத்துவர்கள், பெற்றோரின் பெருந்தொகை பணத்தை சிகிச்சை என்ற பெயரில் திரட்டியுள்ளனர்.
மருத்துவமனை கூறிய நிலைமையால் நம்பிய பெற்றோர், சொந்த நிலத்தை வைப்பில் வைத்தும், மனைவியின் நகைகளை விற்றும், குழந்தையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தை பலியாகிய பின்னும் மருத்துவமனை வசூலை நிறுத்தவில்லை என்பது பெற்றோரின் வேதனை.
இந்த சம்பவம் தொடர்பாக, பஸ்தி மாவட்ட சுகாதார அலுவலர் ராஜீவ் நிகம், “உரிய முறையில் புகார் வந்தால் விசாரணைக்குழு அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக சத்தம் எழுப்பும் பலரும், “மரணம் ஏற்பட்ட பின் கூட சிகிச்சை என்ற பெயரில் பணம் வசூலிப்பது மனிதாபிமானமற்ற செயல்” எனக் கண்டித்து வருகின்றனர்.
குழந்தையின் மரணத்திற்கு முழுமையான காரணம் மருத்துவ அலட்சியமா? இல்லையெனில் திட்டமிட்டு செய்த மோசடியா என்பதையும் விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
