திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் விவசாயியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டாரங்குளம் சுடலை கோவில் அருகே நிலம் இருக்கிறது. அதற்கு அருகே மாரியப்பனின் அண்ணன் மகன் கோபால கண்ணனின் நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது வயலில் நெல் அறுவடை செய்வதற்காக மாரியப்பன் அறுவடை இயந்திரத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது கோபால கண்ணன் அவரது வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் போட்டுள்ளார்.

அப்போது அறுவடை இயந்திரம் போக வேண்டும் என்பதால் இப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டாம் என கூறி மாரியப்பன் மோட்டாரை அணைத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் கோபால கண்ணன் தனது சித்தப்பாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த மாரியப்பன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோபால கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.