தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப தர உத்தரவிடக்கோரி பாபி டச் கோல்ட் யூனிவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று கொடுத்த கால்ஷீட் படத்தை தயாரிக்காமல் தனக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக கூறி 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாபி டச் கோல்ட் யுனிவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் மூலம் எதிர்மறையான விளம்பரம் தான் ஏற்படும். அதற்கு பதிலாக பணத்தை திரும்ப கொடுக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரவி மோகன் தரப்பு வழக்கறிஞர், ரவிமோகன் அடுத்த படத்தில் நடிக்கும் போது பணத்தை திரும்ப அளிப்பதாக கூறியதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை என்றும் கொடுத்த கால்ஷீட்டை  பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தனது மனைவியுடன் பிரச்சனையின் போது வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறிக்கை வெளியிட்ட ரவி மோகன் தற்போது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும், அதை தாங்கள்கொடுத்த பணத்தில் தான் அவர் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் மீது ரவிமோகன் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.