
திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே நடந்த சம்பவம், கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 22 வயது அனீஷா என்பவர், ஒரு லேப் டெக்னீசியன். அவருக்கும், 25 வயது பபின் என்ற இளைஞருக்கும், முகநூல் வழியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது.
இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், 2021-ம் ஆண்டு நவம்பரில் அனீஷா முதல் குழந்தையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை பிறந்தவுடன் முகத்தை மூடி, மூச்சை அடக்கி கொன்றுள்ளார். பிறகு வீட்டின் பின்புறம் ஒரு அடி ஆழம் குழிதோண்டி புதைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமான அனீஷா, மீண்டும் ஆண் குழந்தையை பெற்றெடுத்து, அந்தக் குழந்தையை மூச்சை நிறுத்தி கொன்றபின், வேட்டியில் சுற்றி, பையில் வைத்து, தனது காதலன் பபின் வீட்டுக்கு கொண்டு சென்றார். பபின், அந்த குழந்தையின் உடலை தன் வீட்டுக்கு அருகே புதைத்தார்.
இந்நிலையில், அனீஷா, பபினை விட்டு வேறு ஆணுடன் பழகத் தொடங்கியதால், கோபமடைந்த பபின், இவ்விஷயங்களை நேரில் சென்று புதுக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே போலீசார் விசாரணை நடத்தினர்.
அனீஷா அளித்த வாக்குமூலத்தில், “பபினுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கர்ப்பமானேன். யாருக்கும் தெரியாமல் வயிற்றில் துணி கட்டியபடி வெளியே சென்று வந்தேன். யூடியூப்பில் பிரசவம் பற்றிய வீடியோக்கள் பார்த்து அறிந்தேன். என் மருத்துவ அறிவும் உதவியது.” என கூறியுள்ளார்.
முதல் குழந்தை பிறந்ததும், அது அழுததால், சத்தம் வெளியே போகாமல் இருக்க முகத்தை மூடி வைத்தேன், அதனால் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது. இரண்டாவது குழந்தையையும் அதேபோல் கொன்றதாக கூறியுள்ளார்.
இரண்டாவது குழந்தையின் உடலை அனீஷா பபினிடம் கொடுத்ததாகவும், பபின் அதை புதைத்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர், பபின் தனது மொபைல் போனில் முதல் குழந்தையின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்திருந்தார். ஆனால், தகராறு ஏற்பட்டதும், பபின் தன் மொபைலை உடைத்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால், முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் அழிந்துவிட்டன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல்களைத் தொடர்ந்து, அனீஷா மற்றும் பபின் இருவரும் கைது செய்யப்பட்டு, கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம், சமூகத்தை மட்டுமல்ல, சட்டத்தையும் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் குழந்தைகளின் உயிரை காவலாக்கி, காதலுக்காக உயிரைப் பலியாக்கும் செயல் குறித்து, சமூகத்தில் கடும் கண்டனமும், கவலையும் எழுந்துள்ளது.