உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, லக்னோவில் இருந்து பரேலி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து திடீரென 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் பறக்கத் தொடங்கின. இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ரயிலில் பயணித்த ஒருவர், பெரிய பையில் இருந்த நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த நோட்டுகள் தரையில் விழுந்தவுடன், மக்கள் அவற்றைப் பொறுக்குவதற்காக ரயில்வே தண்டவாளத்தை நோக்கி ஓடினர். இரவு நேரமானதால், மொபைல் ஃபோன் டார்ச் வெளிச்சத்தில், சிலர் வீட்டில் இருந்து டார்ச் லைட்டுகளை எடுத்து வந்து பணத்தைத் தேடினர். இந்தக் காட்சி, திரைப்படக் காட்சியைப் போலவே இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரேலி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், மக்கள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த நோட்டுகளைப் பொறுக்குவதற்காக ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. இந்த நோட்டுகள் உண்மையானவையா? அல்லது போலியானவையா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

ஃபரித்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராதேஷ்யாம், இந்தச் சம்பவம் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை என்றும், மக்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருவதாகவும், உண்மையை அறிய முயற்சி செய்வதாகவும் கூறினார். இந்த நிகழ்வு, நோட்டுகளை வீசியவர் யார், அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, இதன் பின்னணி என்ன என பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இரவு முழுவதும் பணம் பொறுக்குவதற்காக மக்கள் கூடிய இந்த அசாதாரண நிகழ்வு, பரேலியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.