மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவர், பெற்றோர் தனக்குத் திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதால், IAS அதிகாரியாகும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக, வீட்டை விட்டு வெளியேறி 10 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது இந்தூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
12ஆம் வகுப்பில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற அந்தச் சிறுமி, UPSC தேர்வுகளில் வெற்றி பெற்று IAS அதிகாரியாக வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருந்தார். ஆனால், பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்ததால், ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சிறுமி வீட்டை விட்டுச் சென்றதைத் தொடர்ந்து, அவரது தந்தை ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் (Jabalpur High Court) மனுத் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரைத் தேடி இந்தூரில் கண்டுபிடித்தனர். இந்தூரில் அவர் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, அமைதியாகத் தனது குடிமைப் பணிகளுக்கான தயாரிப்பைத் தொடங்கி உள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, உடனடியாகத் தந்தையுடன் செல்லச் சிறுமி மறுத்துவிட்டார். இருப்பினும், “சில நாட்களுக்குப் பெற்றோருடன் தங்கிப் பார்க்குமாறு” நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்படி முடியவில்லை என்றால், அவரது கல்வி மற்றும் தங்குமிடத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்து தரும் என்றும், அவர் தனது IAS தேர்வுக்குத் தொடர்ந்து தயாராகலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது.
