உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் (Gorakhpur), மனைவி தனது கள்ளக்காதலனுடன் இருப்பதைப் பார்த்த கணவரை, இருவரும் சேர்ந்து கத்தியால் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.

ஊருவா பஜார் (Uruwa Bazar) பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பிரியங்கா சௌராசியா என்ற பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரத்தும் என்றழைக்கப்படும் சைது சௌராசியாவைத் திருமணம் செய்த பிறகும், அங்கித் சௌராசியா என்ற தனது கள்ளக்காதலனுடன் உறவைத் தொடர்ந்து வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நண்பகலில், கணவரின் உறவினர்கள் இல்லாத நேரத்தில், பிரியங்கா தனது கள்ளக்காதலன் அங்கித்தை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது கணவர் பிரத்தும் எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வந்தபோது, இருவரையும் ஒன்றாகப் பார்த்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, பிரியங்காவும் அங்கித்தும் சேர்ந்து பிரத்தமை கயிறால் கட்டி, கத்தியால் அவரது கழுத்து மற்றும் உடலில் பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது பிரத்தும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றும், வாக்குமூலம் அளிக்கக்கூடிய நிலையில் உள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.