மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தின் குறுக்கே விரிப்பை விரித்துப் படுத்துக் கிடந்த நபரின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் அந்த நபரை எழுந்து செல்லுமாறு கூச்சலிட்டும், மதுபோதையில் இருந்ததாகக் கருதப்படும் அவர் அதனைக் கண்டுகொள்ளாமல் படுத்தே இருந்துள்ளார்.
அந்தச் சமயம் பன்வெல் நோக்கிச் செல்லும் புறநகர் ரயில் ஒன்று அதே தண்டவாளத்தில் நிலையத்திற்குள் நுழைந்ததால் பயணிகள் அனைவரும் பதற்றமடைந்தனர். ரயில் என்ஜின் ஓட்டுநர் தண்டவாளத்தில் நபர் ஒருவர் படுத்திருப்பதை முன்கூட்டியே கவனித்து, உடனடியாக ரயிலின் வேகத்தைக் குறைத்து சாமர்த்தியமாகச் செயல்பட்டார்.
ரயில் அந்த நபருக்கு மிக அருகாமையில் வந்து நின்றதால் ஏற்படவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அந்த நபரைத் தண்டவாளத்திலிருந்து அகற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், ஓட்டுநரின் துரித நடவடிக்கையைப் பயணிகள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
