ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உட்பட 77 பேர் இந்த போட்டியிட்டனர். பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருப்பதால் முடிவுகள் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறி இருந்தனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரண்டு சுற்றுகளின் அதிகாரப்பூர்வ தகவல் முடிவுகள் வெளியான நிலையில் போட்டியிட்ட 77 பேரில் 12 வேட்பாளர்களுக்கு இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை எனவும் அவர்களது கணக்கு பூஜ்ஜியமாகவே இருந்ததும் தெரியவந்துள்ளது. அதேபோல் 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிற்பகலுக்குப் பின் தான் முடிவுகள் தெரியவரும். இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக மாலையில் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியிருந்தனர்.