இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது என வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அதிகரிக்க கூடாது. அதிமுக கட்சி தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் கீழ் தான் செயல்படுகிறது. உண்மையான அதிமுக ஓ. பன்னீர்செல்வம் தான். ஓபிஎஸ் கையெழுத்திடும் வேட்பு மனுக்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட வேண்டும். கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் தான் கட்சி இருக்கிறது என்று கூறி அழுத்தம் கொடுக்கிறார்.

இதன் மூலம் அவர் தேர்தல் ஆணையத்தை தவறான முறையில் வழிநடத்த முயற்சிக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் கூட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட 18 வழக்குகள் சென்னை ஹைகோர்ட் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திடம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.