தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது சிறுபான்மை நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுபான்மையினர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது, வறுமையில் வாடும் சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 2500 தையல் இயந்திரங்கள் மின் மோட்டாருடன் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 60 லட்ச ரூபாய் செலவிடப்படும். சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து 30,000 ஆக உயர்த்தப்படும்.

இதேபோன்று சிறுபான்மையினர் நலத்துறைக்கு கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர நலவாரிய உறுப்பினர்களின் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ. 1000 உதவி தொகை மாதந்தோறும் வழங்கப்படும். அதன் பிறகு சிறுபான்மையுடன் நலத்துறையின் செயல்படும் ஊழியர்கள் விபத்து மூலம் மரணம் அடைந்தால் வழங்கப்பட்டு வரும் உதவி தொகை ரூ. 1,00,000 இல் இருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்படும். சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மையினர் மாணவர்களுக்காக 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவ விடுதிகள் கட்டப்படும். மேலும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டிகள் நடத்துவதற்கு ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.