ஏசிசி வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய ஏ அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது பாகிஸ்தான் ஏ அணி..

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது 23 வயதுக்குட்பட்ட வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி லீக் போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, அரையறுதியில் வங்கதேசத்தையும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.. அதேபோல பாகிஸ்தான் அணி தனது லீக் போட்டிகளில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு அணிகளை தோற்கடித்தது.. ஆனால் இந்தியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பின் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான் அணி..

இந்நிலையில் இன்று இறுதிப்போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பான துவக்கம் கொடுத்தது.. அந்த அணியின் துவக்க பேட்டர்களான சைம் அயூப் 59 ரன்களும், சாஹிப்சாதா ஃபர்ஹான் 65 ரன்களும்  எடுத்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. பின்வந்த உமைர் யூசுப் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

தொடர்ந்து காசிம் அக்ரம் 0, முகமது ஹாரிஸ் 2 ரன்னில் அவுட் ஆன போதிலும், தயப் தாஹிர் சிக்ஸ், பவுண்டரி என அதிரடியாக ஆட ஸ்கோர் 300ஐ தாண்டியது. தயப் தாஹிர் 71 பந்துகளில் (12 பவுண்டரி, 4 சிக்சர்) 108 ரன்கள் விளாசி அவுட் ஆனார். மேலும் முபாசிர் கான் 35 ரன்களும்,  மெஹ்ரான் மும்தாஜ் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக முகமது வாசிம் 17* ரன்களுடனும், சுபியான் முகீம் 4* ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருக்க இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் ரியான் பராக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

 

பின்னர் இலக்கை துரத்துவதற்காக இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 29 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதைத் தொடர்ந்து வந்த நிகின் ஜோஸ் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.. இதையடுத்து கேப்டன் யாஷ் துல்  மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்த நிலையில், அவரும் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த நிஷாந்த் சிந்து 10 ரன்னிலும், யாஷ் துல் 39 ரன்னிலும் அவுட் ஆக இந்திய அணி 25.3 ஓவரில் 159 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

அதன்பின் வந்தயாரும் நிலைக்கவில்லை.. துருவ் ஜூரல் 9, ரியான் பராக் 14, ஹர்ஷித் ராணா 13, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 11, யுவராஜ்சிங் தோடியா 5 என அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினர்.. இறுதியில் இந்திய ஏ அணி 40 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சுபியான் முகீம் 3 விக்கெட்டுகளும், மெஹ்ரான் மும்தாஜ், முகமது வாசிம் மற்றும் அர்ஷத் இக்பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் ஏ அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி  சாம்பியன் ஆனது..