ஈரோடு மாவட்டத்தில் உள்ள சொலவனூர் கோழி பண்ணை தோட்டத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளையும், 1 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி மற்றும் தென்னங்கன்றுகளை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து வாழைகளை தின்றும், காலால் மீதித்தும் நாசப்படுத்தியது.

இதே போல தர்பூசணி மற்றும் தென்னங்குருத்துகளையும் காட்டு யானைகள் நாசப்படுத்தி விட்டு நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்றது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற வெங்கடாசலம் 600 வாழைகள், 1/2 ஏக்கர் பரப்பளவிலான தர்பூசணி, 12 தென்னங்கன்றுகள் ஆகியவற்றை யானைகள் நாசப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமான பயிர்களை பார்வையிட்டு சென்றுள்ளனர்.