தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தன மாரியம்மாள் (32) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தை ஊரில் உள்ள தன் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த பணத்தில் கிருபைநகர் பகுதியில் ஒரு இடம் வாங்கி தன் பெயரில் சந்தன மாரியம்மாள் வீடு கட்டியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து பாலமுருகன் திரும்பிய நிலையில் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது பாலமுருகன் தன் மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துள்ளார். அதோடு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீட்டிலும் சந்தன மாரியம்மாள் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தன் மனைவியைப் பிரிந்து கடந்த ஆறு மாதங்களாக பாலமுருகன் தனியாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய மனைவி தன்னுடைய தாய் மாமாவிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை அவருடைய தாய் மாமன் காளிமுத்து கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் காளிமுத்து மற்றும் பாலமுருகன் இருவரும் சந்தனம் மாரியம்மாள் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தன மாரியம்மாள் மொபட்டில் கணேஷ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை காளிமுத்து மற்றும் பாலமுருகன் இருவரும் வழிமறித்து தகறாறு செய்தனர். அதன் பிறகு இருவரும் சரமாரியாக அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து விட்டனர். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தன மாரியம்மாள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரையும் கைது செய்து அவர்கள் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.