அரியலூர் மாவட்டத்தில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் மோகன் என்பவரை அணுகியுள்ளார். இவர் தினேஷிடம் ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். அதன்பிறகு பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கிய நிலையில் அது பின்னர் போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் நடத்தி வந்த நிலையில் மற்றொரு நபருக்கு மோகன் போலி பணி நியமன ஆணையை கொடுக்க முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மோகன் மற்றும் அவருடைய மனைவி கௌசல்யா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து 34 அரசு போலி பணிநியமன ஆணைகள், 48 அரசு முத்திரைகள் மற்றும் 8 போலி அடையாள அட்டைகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.