தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே  கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய விதமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ரத்தினம்மாள் (70), அவருடைய மகன் பழனிச்சாமி மற்றும் மருமகள் முருகேஸ்வரி என்பது தெரிய வந்தது. இவர்கள் கண்டமனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்தோடு சென்று அப்பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.