கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் அடிக்கடி தன் மனைவியுடன் ரவிக்குமார் தகராறு செய்ததோடு அவரை கொன்றுவிடுமாறும் கூறியுள்ளார். இதேபோன்று நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சாவித்திரி தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அதன் பின் கால்வாயில் தன் மகனை வீசிவிட்டு காவல் நிலையத்தில் சென்று நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கால்வாயில் வீசப்பட்ட சிறுவனை தேடினார். அப்போது நேற்று காலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். அப்போது சிறுவனின் வலது கை துண்டாகி இருந்ததோடு உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. அதாவது அந்த கால்வாயில் முதலைகள் இருக்கிறது. இதனால் சிறுவனை தூக்கி வீசிய சிறிது நேரத்தில் முதலைகள் அவனை இழுத்துச் சென்று கொடூரமான முறையில் கடித்து குதறியுள்ளது. இதனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.