பஞ்சு மிட்டாய் தின்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். குழந்தைகளும் சிறார்களும் விரும்பி தின்னும் பஞ்சுமிட்டாய் தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயை பார்த்ததும் சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர் சுரக்க வைத்து விடுகிறது. தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது பஞ்சு மிட்டாய். சமீபத்தில் கேரளாவில் துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தப்படும் ரசாயனங்களை பஞ்சமிட்டாய் தயாரிக்க பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.
அதைத் தொடர்ந்து கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொல்லம் மாவட்டத்தில் தங்கி இருந்து பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வரும் வட மாநிலத்தவர்களின் வீடுகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கி இருந்த வீடுகளில் ரோடமைன் என்னும் துணிகளில் நிறம் ஏற்ற பயன்படும் ரசாயனம் இருந்ததையும் அதை பயன்படுத்தி வண்ண வண்ண பஞ்சுமிட்டாய்களை தயாரித்ததையும் கண்டுபிடித்தனர். புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரோடமைன் ரசாயனத்தை பஞ்சு மிட்டாயில் கலந்திருந்ததை கண்டு கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றை தயாரித்த வட மாநிலத்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.