பிரியாணி என்பது பலருக்கும் மிகவும் பிடித்த உணவாகும். ஆனால், வேலை முடிந்து இரவு 10 மணிக்கு மேல் பிரியாணி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் எட்வினா ராஜ் இதுகுறித்துத் தெரிவிக்கையில், எப்போதாவது ஒருமுறை இரவில் பிரியாணி சாப்பிடுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது; ஆனால் அதை வழக்கமாக்கிக் கொள்வது உடலுக்குக் கெடுதலைத் தரும் என்று கூறியுள்ளார்.
பிரியாணியில் அதிக கலோரிகள், எண்ணெய், மசாலா மற்றும் இறைச்சி இருப்பதால் அது செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஒரு கனமான உணவாக மாறுகிறது. இரவில் நமது உடல் ஓய்வு நிலைக்குச் செல்வதால், மசாலா உணவுகள் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி மெதுவாகவே செரிமானமாகும். இதனால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிறு உப்புசம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
தொடர்ந்து இரவு நேரத்தில் அதிகளவில் பிரியாணி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை அளவில் மாற்றம் மற்றும் தூக்க பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய், உடல் பருமன், அசிடிட்டி (GERD), கொழுப்பு கல்லீரல் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் அல்லது மிகக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை இரவில் பிரியாணி சாப்பிட நேரிட்டால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். பிரியாணியை அளவோடு சிறிய அளவில் சாப்பிட வேண்டும். அதனுடன் தயிர் அல்லது காய்கறி சாலட் சேர்த்து உண்பது செரிமானத்திற்கு உதவும். மேலும், பிரியாணியுடன் குளிர்பானங்கள் அல்லது இனிப்புகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கியமாகப் பிரியாணி சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் நல்லது. சாப்பிட்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல், குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரத்திற்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். பிரியாணியை முழுமையாகத் தவிர்க்கத் தேவையில்லை என்றாலும், அதை அளவோடும் சரியான நேரத்திலும் சாப்பிடுவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்குச் சிறந்த வழபாடாகும்.
