ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த லீபா சுபின் என்ற பெண், தனது குடும்பத்துடன் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ள செய்தி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துபாயில் அதிக வருமானம் ஈட்டும் வேலையில் இருந்தபோதிலும், அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடாமல் இந்தியா திரும்பும் முடிவை அவர் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், இந்த முடிவு ஒரு திடீர் உணர்ச்சியால் எடுக்கப்பட்டது அல்ல என்றும், மன அமைதி மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீண்ட காலத் திட்டமிடலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட தெளிவான முடிவு என்றும் அவர் விளக்கியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by leeba (@unfilteredvoiceswithinme)

தாய்நாடு திரும்பியதற்கான முக்கிய காரணங்களாக அவர் நிதி சுதந்திரம் மற்றும் குடும்ப சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார். துபாயில் வாடகை மற்றும் விசா புதுப்பித்தல் போன்ற செலவுகள் ஒருபுறம் இருக்க, தனது குழந்தையின் கல்விக்காக தினமும் 3 மணி நேரம் பயணத்தில் செலவிட வேண்டியிருந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கேரளாவில் பள்ளி அருகிலேயே இருப்பதால் அந்த நேரம் மிச்சமாவதுடன், தற்போது கடன் மற்றும் மாதத் தவணைகள் இல்லாத சுதந்திரமான வாழ்க்கையைத் தாங்கள் வாழ்வதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிப்பதும், உறவுகளுடன் நெருக்கமாக இருப்பதும் தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.