ஓடும் ரயிலில் ஏறுவது எப்போதும் ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டாலும், அவசரம் காரணமாகப் பல பயணிகள் அத்தகைய அபாயகரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் பயணி ஒருவர் அவசரமாக ஏற முயற்சி செய்கிறார்.

 

அப்போது அவரது பையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து நடைமேடையில் விழுகிறது. அவர் ரயிலுக்குள் ஏறிவிட்டாலும், கீழே விழுந்த செல்போனை அங்கிருந்த மற்றொரு நபர் எடுத்துச் செல்கிறார்.

ரயில் வேகம் எடுத்ததால் தனது செல்போனைத் திரும்பத் தரச் சொல்லி அந்தப் பயணி சத்தமிட்டபடி செல்வதும், ஆனால் செல்போன் அவரிடம் கிடைக்காமல் போவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இணையவாசிகள், ஒரு சில நிமிடங்கள் காத்திருந்து அடுத்த ரயிலில் செல்வதே பாதுகாப்பானது என்றும், சில ஆயிரம் ரூபாய் பயணச் சீட்டுக்காகப் பல ஆயிரம் மதிப்புள்ள செல்போனை இழந்ததுடன் உயிரையும் பணையம் வைத்தது தேவையற்றது என்றும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.