கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோழிக்கோடு மாவட்டம், தொட்டில்பாலம் பகுதியைச் சேர்ந்த பினு தாமஸ் (52), பாலக்காடு மாவட்டம் செர்ப்புளசேரி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 15ஆம் தேதி, இவர் தான் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர் தற்கொலைக்கு முன் எழுதியிருந்த 32 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், தற்போது கோழிக்கோடு வடகரை டி.எஸ்.பி.யாக இருக்கும் உமேஷ் மீது பினு தாமஸ் பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியாகி, கேரளாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
அந்தக் கடிதத்தில் பினு தாமஸ் குறிப்பிட்டதாவது: “கடந்த 2014ஆம் ஆண்டு நான் பாலக்காடு வடக்காஞ்சேரி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தேன். அப்போது உமேஷ் இன்ஸ்பெக்டராக இருந்தார். ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை உமேஷ் பின்னர் விடுவித்து விட்டார்.
அன்று இரவே என்னை கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் தாயின் கண் எதிரே அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். தன் ஆசைக்கு இணங்காவிட்டால் விபச்சார வழக்கில் கைது செய்து படத்துடன் பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுப்பேன் என்று அப்பெண்ணை மிரட்டினார்.
மேலும், என்னையும் அந்தப் பெண்ணைப் பலாத்காரம் செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தினார், ஆனால் நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் உமேஷ் தன்னை மனரீதியாகத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார்” என்று பினு தாமஸ் அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். டி.எஸ்.பி. மீது கூறப்பட்டுள்ள இந்த கடுமையான பலாத்காரப் புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
