
கலிபோர்னியாவை சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர் கார் விபத்து மூலம் மூன்று சிறுவர்களை கொலை செய்த குற்றத்திற்காகவும் மூன்று சிறுவர்களை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்ததற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது ஆறு ஆறு சிறுவர்கள் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு சிறுவனுக்கு சவால் ஒன்று விடுக்கப்பட்டது. அதாவது அனுராக் சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை அடித்து விட்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி சிறுவனும் அனுராக் சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடி வந்து காரில் ஏரியுள்ளார். இதனைப் பார்த்த அனுராக் சந்திரா சிறுவர்களின் காரை விரட்டிச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவர்களின் காரை அவர் இடித்து தள்ளியதில் விபத்து ஏற்பட்டு டேனியல், ஜேக்கப், டிராக் எனும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்ற மூவரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அனுராக் சந்திராவை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது அனுராக் சந்திராவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.