அமேசான் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்த தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தனது உணர்ச்சிகரமான அனுபவத்தை பிளைண்ட் தளத்தில் பகிர்ந்துள்ளார். “17 ஆண்டுகளாக ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை; குழந்தைகளுடன் விளையாடவோ, இரவு உணவில் அமரவோ நேரமில்லை.
குடும்பத்துக்காகவே செய்கிறேன் என்று நினைத்தேன்” என்று குறிப்பிட்டார். பணிநீக்க மின்னஞ்சல் வந்ததும் அழுது தீர்த்த அவர், மனைவியுடன் காலை உணவு தயாரித்து, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார் – அவர்களின் சிரிப்பு அவரை உலுக்கியது.
“இதுதானா வாழ்க்கை?” என்று உணர்ந்தார். மனைவியிடம் காபி குடிக்கச் சென்று விஷயத்தைச் சொன்னபோது, அவர் ஆச்சரியப்பட்டாலும் “குடும்பமாக சேர்ந்து கடப்போம்” என்று ஆதரவு தந்தார்; மீண்டும் கண்ணீர் வடித்தார்.
பணிநீக்கத்தால் திகைத்தாலும், எதிர்காலம் குறித்து தெளிவு பெற்றுள்ளார். “வேலை சந்தை கடினமானது என்கிறார்கள்; ஆனால் கடந்த 17 ஆண்டுகளைப் போல் வாழ விரும்பவில்லை.
ரசித்து வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார். பணிநீக்கம் ஆனவர்களுக்கு ஆறுதல் செய்தி: “வலுவாக இருங்கள்; இது முடிவல்ல. தவறு உங்களுடையதல்ல.” இந்தப் பகிர்வு, வேலை-வாழ்க்கை சமநிலை முக்கியம் என்பதை வலியுறுத்தி, பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
