சென்னை காவல் ஆணையரிடம் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் ஆன்லைனில் சேவை நடத்தி வந்த நெல்லூரை சேர்ந்த வடலபள்ளி விஜயகுமார் என்பவர் தனது மகளுக்கு பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் MBBS சீட் வாங்கி தருவதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு 71.63 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் இதுவரை சீட் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அப்புகாரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் வடலபள்ளி விஜயகுமார் என்பவர் MBBS சீட் வாங்கி தருவதாக கூறி பலபேரை ஏமாற்றியதும், அவர் மீது நெல்லூர் வேதபாளையம் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த அவரை காவல்துறையினர் தேடி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி ஆந்திராவில் வைத்து காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.