மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமண ஊர்வலங்களில் பயன்படுத்தப்படும் குதிரை ஒன்று கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் நடந்த ஒரு திருமண ஊர்வலத்தில், கால்களில் பலத்த காயங்களுடன் குதிரை ஒன்று மிகவும் சிரமப்பட்டு வண்டியை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில், குதிரையின் பின்னங்கால்கள் சூடு வைக்கப்பட்ட தழும்புகளுடனும், வீக்கத்துடனும் காணப்பட்டன. கடும் வலியால் குதிரை நொண்டி நொண்டி நடப்பதைக் கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய ‘பீட்டா’ (PETA) அமைப்பு, அந்தக் குதிரைக்கு மூட்டு தேய்மானம் இருந்தும், அதன் உரிமையாளர் தொடர்ந்து வேலை வாங்கியதை உறுதி செய்தது.
View this post on Instagram
மேலும், கால்களில் இருந்த வலியைப் போக்க ‘பழங்கால சிகிச்சை’ என்ற பெயரில் சூடான இரும்பு கம்பிகளால் குதிரையின் கால்களில் சூடு வைக்கப்பட்ட திடுக்கிடும் உண்மையும் அம்பலமானது.
இதனையடுத்து, குவாலியர் போலீசார் உதவியுடன் அந்தக் குதிரை உரிமையாளரிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. தற்போது அந்த வாயில்லா ஜீவன் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் திருமணங்களுக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சொகுசு கார்களைப் பயன்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
