மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 90-களின் ஹிட் படமான ‘ஜூதாய்’ (Judai) படக் கதையையே மிஞ்சும் வகையில் ஒரு நிஜ விவாகரத்துச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 42 வயதான அரசு ஊழியர் ஒருவர், தன்னுடன் வேலை பார்க்கும் 10 வயது மூத்த பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையைத் தாங்க முடியாமல், அவரது 16 வயது மகளே குடும்ப நீதிமன்றத்தில் புகார் அளித்தார். விசாரணையில், “நான் என் காதலியுடன் தான் வாழ்வேன்” என்று அந்த நபர் பிடிவாதமாக இருக்க, அவரது மனைவி ஒரு அதிரடி நிபந்தனையை விதித்தார்.

“என் மகள்களின் எதிர்காலத்திற்காக எனக்கு ஒரு சொகுசு வீடு (Duplex house) மற்றும் 27 லட்சம் ரூபாய் ரொக்கம் என மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செட்டில்மென்ட் வேண்டும்” என்று அவர் கேட்டார்.

இதைக் கேட்ட அந்த நபரின் காதலி, துளியும் யோசிக்காமல் “பணத்தை வாங்கிக்கொண்டு என் காதலனை என்னிடம் விட்டுவிடுங்கள்” எனக் கூறி அந்தத் தொகையைச் செட்டில் செய்யச் சம்மதித்தார்.

காதலனுக்காக அவரது குடும்பத்திற்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்த அந்தப் பெண்ணின் செயல், நீதிமன்றத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இரண்டு தரப்பும் சுமூகமாகப் பிரிய சம்மதித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் போபாலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.