தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது. அதோடு அங்கிருந்த பைக்குகளும் சேதமடைந்துள்ளது.

திருச்சி சிவா வீடு தாக்கப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த 6 பேரிடமும் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி சிவா வீட்டின் அருகே உள்ள மைதானத்தை கேஎன் நேரு திறந்து வைத்தார். இந்த விழா அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இல்லை என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். இதன் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவுக்கு கருப்புக் கோடி காட்ட முயன்ற திருச்சி சிவா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து காவல் நிலையத்திற்குள் புகுந்த நேரு ஆதரவாளர்கள், சிவா ஆதரவாளர்கள் மீது நாற்காலி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தாக்கினர். இருதரப்பினர் சண்டையில் பெண் காவலர் சாந்திக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.