விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ்த்திருத்தங்கல் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 11 வயது பேரன் தினேஷுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தினேஷுக்கு மனவளர்ச்சி குன்றியதாக தெரிகிறது. இந்நிலையில் தனது பேரனுக்கான மாற்றுத்திறனாளி உதவி தொகை ரூபாய் 1500 மட்டுமே வைத்து கொண்டு லதா தனது பேரனை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்ச்சி காரணமாக மன வளர்ச்சி குன்றிய தனது பேரனை பள்ளியில் சேர்க்க முடியாமலும், பராமரிக்க இயலாமலும் லதா சிரமப்பட்டுள்ளார்.

எனவே தனக்கு வீடு வழங்கி உதவி செய்த வலியுறுத்தி லதா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சிவகாசி ஆனையூர் பகுதியில் இருக்கும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டை மூதாட்டிக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் தினேஷை மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். தனது கோரிக்கையை ஏற்று உதவி செய்த மாவட்ட ஆட்சியருக்கு மூதாட்டி நன்றி தெரிவித்துள்ளார்.