மகாராஷ்டிராவில் ஆன்லைன் உணவு மற்றும் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் இனி கண்டிப்பாக போலீஸ் வெரிஃபிகேஷன் செய்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த முக்கியமான உத்தரவு விரைவில் ஆன்லைன் உணவு மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பிறப்பிக்கப்பட உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகாஷ் ஃபண்ட் கர், டெலிவரி பார்ட்னர்கள் பலர் முறையான பின்னணி சோதனை இன்றி பணியமர்த்தப்படுவதாக கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில், போலீஸ் வெரிஃபிகேஷன் சான்றிதழ் இல்லாதவர்களைப் பணியில் அமர்த்தக்கூடாது என்றும், அப்படி வேலை செய்பவர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது காவல்துறை உதவியுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.