ஈரோடு மாவட்டம் பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான 29 வயதான பூரணி, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் பெண் வீட்டார் சமாதானமடைந்து இருவரையும் ஏற்று கொண்டனர். ஆனால், மதனின் குடும்பத்தினர் பூரணியின் குடும்பத்தினரை பார்க்க விடாமல் தடுத்ததுடன், சொத்து மற்றும் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து  பூரணி, கர்ப்பமான நிலையிலும்,  அவரை காண மதன் பெற்றோ அனுமதிக்கவில்லை. பின் குழந்தை பிறந்த பின்னும் அவரது பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில்  அக்டோபர் 10ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

அவரது மரணத்தில் தொடர்புடையதாக கருதப்படும்  மதன்குமாரின் குடும்பத்தினர் தலைமறைவாகினர். அவர்கள் தலைமறைவாகி 1 மாதம் கடந்த பின்னும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த பூரணியின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் தகவலறிந்த எஸ்.பி நடத்திய பேச்சுவார்த்தையில், பூரணியின் உறவினர்களிடையே  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.