ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வசிக்கும் அரிசி வியாபாரி நரசிம்மல்லு– அஞ்சலிதேவி தம்பதியின் மகன் பாஞ்சாலா சைதன்யா (23). இவர் 6 ஆண்டு மருந்தியல் படிப்பை முடித்துள்ளார். இவர் சிறுவயது முதலே பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
காஷ்மீரில் தம் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது போளூர் வந்தடைந்தார். மேலும் போளூர் வந்த இவரை பைபாஸ் சாலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் என திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இதுவரை 4 ஆயிரத்து 230 கிலோ மீட்டர் தூரத்தை இவர் கடந்துள்ளார். மேலும் இவரிடம் உள்ள பிரத்தியேகமாக நவீன சைக்கிள் மூலம் தினமும் 100 முதல் 120 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வருகிறார்.
மேலும் இவர் கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பதற்காக, எலக்ட்ரானிக் கையடக்க கருவியின் மூலம் தினமும் பயணம் செய்யும் தூரம், நேரம், காலம், ஆகியவற்றை பதிவு செய்து பயணம் செய்து வருகிறார். இதனையடுத்து பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் பசுமை பாதுகாப்பு பற்றியும் மக்களிடையே சைக்கிள் பயணம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் நெல்லூர் முதல் பாகிஸ்தான் எல்லை வரை ஜூன் 4 முதல் 70 நாட்களில், 7 மாநிலங்கள் பயணம் மேற்கொண்டதற்கு ஆந்திரா அரசின் ‘யூத் ஐகான்’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக இந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.