நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மேற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பெரியசாமி திருச்செங்கோட்டில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். மேலும் அவரது பெயரில் இன்சுரன்ஸ் எடுக்க 1 லட்சத்து 39 ஆயிரத்து 510 ரூபாயும் சேர்த்து மொத்தம் 16 லட்சத்து 51 ஆயிரத்து 510 ரூபாய் கடன் வாங்கியதாக வங்கியில் கடன் கணக்கு தொடங்கப்பட்டது.

இதற்கிடையே பெரியசாமி உயிரிழந்ததால் வீட்டு கடன் நிலவைத் தொகையை கட்டுமாறு அவரது மனைவி சாந்திக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு சாந்தி எனது கணவர் அவரது பெயரில் இன்சுரன்ஸுக்கு பணம் செலுத்தி இருக்கிறார். எனவே இன்சூரன்ஸ் தொகை மூலம் வீட்டு கடனை வரவு வைத்துவிட்டு வீட்டு அசல் ஆவணங்களை தருமாறு கேட்டதற்கு வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து சாந்தி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் பெரியசாமி இன்சூரன்சுக்காக பணம் செலுத்தியும், அதற்கான பாலிசி எடுக்காதது வங்கியின் சேவை குறைபாடு ஆகும். எனவே கடன் தொகையை தள்ளுபடி செய்துவிட்டு, அசல் ஆவணங்களையும், தடையில்லா சான்றிதழ், நிலுவை இல்லா சான்று ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் சாந்திக்கு கொடுக்க வேண்டும். மேலும் சாந்திக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு, வழக்கு செலவு தொகை 10,000 ஆகியவற்றை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.