மதுரை ஹைகோர்ட்டில் கரூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் கரூர் மாவட்டத்தில் பள்ளி படிப்பை முடித்தேன். எனக்கு காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். ஆனால் வருவாய் அதிகாரி எனது மனுவை நிராகரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்டோரியா கவுரி, சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது, கடந்த 1977-ஆம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி ஒருவர் நிரந்தர வசிப்பிடத்திலிருந்து சான்றிதழ்களை விண்ணப்பிக்க வேண்டும். இதில் நிரந்தர வசிப்பிடம் என்பது அவர்கள் நிரந்தரமாக தங்கி இருக்கும் இடத்தை குறிப்பிடுகிறது. மாறாக அவர்களின் பூர்வீக பகுதியை சுட்டிக்காட்டவில்லை. மனுதாரரின் பெற்றோர் மற்றும் தாத்தா நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

ஆனால் பல ஆண்டுகளாக அவர்கள் கரூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். எனவே மனுதாரர் தனக்கு சாதி சான்றிதழ் கூறிய விண்ணப்பத்தை நிராகரித்த வருவாய்த்துறை அலுவலரின் உத்தரவை ரத்து செய்கிறோம். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர் மனுதாரரின் விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்து நான்கு வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் வருவாய் கோட்டாட்சியர் மனுதாரரை அலைக்கழித்ததால் அரசு சார்பில் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.