கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விஜயராஜ்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு விஜயராஜ் புதுவை மாநிலம் பங்கூரில் தங்கி இருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது விஜயராஜுக்கும், அதே கம்பெனியில் வேலை பார்த்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணமான விஜயராஜின் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றபோது விஜயராஜின் காலில் ஒரு காயம் ஏற்பட்டது. இதனால் விஜயராஜ் சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமியை விஜயராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் விஜயராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட விஜயராஜுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.